Monday, February 11, 2013

3:09 PM


அப்பல்லாம் எங்க ஊரில் பெரிசா கரண்ட் வசதி கிடையாது. மெயின் ரோட்டோரம்; கரண்ட் இருக்கும்.. அதேபோல சில தெருக்களிலும். டி.வி என்றால் ஒரு ஐந்தாறு பேரிடம்தான்.

படம் பார்ப்பதென்றால் கொள்ளைப்பிரியம். படம் என்ன, தமிழி;ல் ஒரு சின்ன பாட்டு பார்க்கிறதென்றாலே சொர்க்கம் மாதிரிதான். எங்க வயசை ஒத்த எல்லாருக்கும் சொர்க்கபுரியாக இருப்பது 40 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்ட படக்கொட்டில்கள்தான். காய்ந்த தென்னை ஓலையை பின்னி கட்டப்பட்டிருக்கும் அக்கொட்டில்களில் இருந்து ஒரு சின்ன சத்தமும் வெளியில் வராது. சாதாரணமாக 22 இஞ்ச் சைஸ் டி.வி தான் உள்ளே இருக்கும். கிறவுட் நிரம்பி வழியும். ஓளிநாடாப்பெட்டி மூலம்தான் படம் திரையிடப்படும்.

10.30 , 02.30 , 08.00 மணி என நாளைக்கு மூன்று ஷோக்கள். பெரியவர்கள் என்றால் ஐந்து ருபாய் முதல் பத்து ரூபாய் வரை செல்லும். அது படத்தை பொறுத்து. புதுப்படம் என்றால் ரேட் அதிகம். சிறியவர்கள் என்றால் இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் வரை. அந்த நேரத்தில் சண்டை படங்கள் என்றால் அலாதி பிரியம். விஜயகாந்த், அர்ஜீன் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். முன்னுக்கு இருப்பது நாங்களாகத்தான் இருக்கும்.

“ டேய் ஏழு பைட்டான்டா படத்தில…”

“ஏழா….”

“ டேய் போவம்டா” என்றால் எப்படியோ அடித்து பிடித்து காசை எடுத்தால் கொண்டாட்டம்தான்.

அப்படித்தான் ஒருநாள் அர்ஜீன் நடித்த ஜெய்ஹிந்த் படம் பார்க்க போயாச்சு. கொட்டில் ஹவுஸ்புல்லாகி படம் ஓடிக்கொண்டிருக்க ரஞ்சிதாவுடனான “ கண்ணா என் சேலைக்குள்ள” பாடல் போய்க்கொண்டிருக்கையில் கொட்டிலுக்குள், வெளி வெளிச்சம் தெரிந்தது. யாரோ கதவை திறந்திருக்கிறார்கள் என திரும்பி பார்த்தோம். அங்கே எங்க ஊரு ஸ்கூல் வாத்தியாரு.

ரொம்ப ரொம்ப மோசமான ஆளுய்யா.. காரணம் கிடைச்சா அடிக்கிறதுக்கு. ஸ்கூல்ல எதாவது தப்பு பண்ணினா அவர் பேரை சொன்னாலே ஒன்ணுக்கு வரப்பாக்கும். அப்படிப்பட்ட வாத்தியாரு அவரு. இப்ப வேற கவர்ச்சியா ரஞ்சிதா ஆடிக்கிட்டிருக்கு.

“செத்தம்டா சாமி..” மனதுக்குள் நினைத்துக்கொள்ள..

“ஸ்கூல் போறாக்களெல்லாம் வெளியால வாங்க.” வாத்தியார்.

 சிறிது அமைதி.

“என்ன சொன்ன விளங்கல்லியா?”

“சேர் கூப்பிடறென்ன எழும்புங்களன்டா….” யாரோ ஒருவர் கூற கடுப்பாகி மெதுவாக எழுந்தோம்.

அரைவாசி கொட்டில் காலியானது. அப்பதான் மனசுக்குள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நிறையப்பேர் வாங்கப்போறம்.

பெரியாக்கள் ஒரு லைன்ல… சின்னாக்கள் ஒரு லைன்ல வாங்க…

சின்னாக்கள் லைன்ல நின்னாச்சு. கொஞ்சம் லைன் பெரிசுதான்.

படிக்கிற வயதில கூடாத படமா பார்க்கிற என்று சொல்லி சொல்லி எங்க லைனுக்கு ஆளுக்கொரு அறை.. பெரியவங்க லைனுக்கு ரெண்டு அறை. அப்பாடா ஒண்ணோட தப்பிச்சம்டா சாமி..

அறையை வாங்கிக்கொண்டு ஒரு கிலோமீற்றர் தூரத்தில இருக்கிற வீட்ட ஓடிப்போறதுக்குள்ள வீடடுக்கும் மெசேஜ் போயிரிச்சு…..

“உன் புள்ள படம் பார்த்து வாத்திக்கிட்ட அடி வாங்கி வாறாண்டியோவ்…”

ஒரு வேளை சாப்பாடு இல்ல.


என்ன வாழ்க்கைடா அது… கிராமத்து வாழ்க்கையையும் இளமைக்காலத்தையும் நினைக்கையில் நெஞ்சு கனப்பது எவ்வளவு சுகமாக இருக்கு!

0 comments:

Post a Comment