Sunday, July 7, 2013

6:41 AM
2
கிரிக்கெட் மேட்ச் டிவியில் போகுதென்றால் அந்தப்பக்கம் தலையே வைச்சிபடுக்காத ஆசாமிங்க நான். ஊரே போற்றிப்புகழ்ந்து துதிபாடுகிற ஆட்டம், தோத்தாக்கா கவலையில உசிரையெல்லாம் விட வைக்கும் விளையாட்டு. கோடிகள் புரளும் விளையாட்டு (ரசிகர்களுக்கல்ல). இப்படிப்பட்ட விளையாட்டு ஏன்யா உனக்கு பிடிக்கல்லன்னு கேட்டிராதீக. பிடித்தமில்லை என்றில்லை. இன்ட்ரஸ்டிங் இல்லாம போச்சு அவ்வளவுதான். கிறிஸ் கெயில் பெட்டிங் ஸ்டைலை கொஞ்சம் ரசித்ததும் உண்டு. இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்லவாறனென்றால் கடந்த மாசம் ஊர்ல கிரிக்கெட் விளையாடுற பசங்களையெல்லாம் ஒண்ணா சேர்த்து ஆறு டீமா பிரிச்சி KPL என்ற பெயரில், அதாவது களுதாவளை பிரீமியர் லீக். ஒரு ரூனமென்ட் நடந்திச்சு. சனி ஞாயிறு விடுமுறை நாளில் நடந்ததால் சேர்ந்து கூத்தடிக்க ஆளில்லாமல் போச்சு. எல்லாப்பயலுவளும் கிரவுண்டே கதின்னு கிடந்துட்டானுவ. வேறவழியில்லாமல் விரும்பியோ விரும்பாமலோ அங்கே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். 
போனபின் கொஞ்சம் விளையாட்டில் ஆர்வம் எகிறத்தான் செய்தது. அதனால் பைனல் மேட்சை போனில் போட்டோ எடுத்தபோது, ‘மாஸ்டர் போட்டோ எடுக்கிறார் நாளைக்கு பேஸ்புக்கில எல்லாம் வரும்’ என்று, நான் படிப்பித்த (ரியுசன்) மாணவன் சொல்லிக்கொண்டிருந்தான். மாசம் ஒன்று கடந்தும் எந்தவொரு போட்டோவையும் நான் ரிலீஸ் செய்யாததால் பய கடுப்பாகிருப்பான் போலிருக்கு. றோட்டால் போகும்போது சத்தம் போட்டு கத்துறான். ‘என்ன மாஸ்டர் ஸ்விச் ஆப் பண்ணின போன்ல போட்டோ எடுத்திருக்கியள் போல? ஒண்டையும் காணல்ல’. என்றான். ச்சே.. என்னவொரு அவமானப்போச்சு. ‘நேரம் இல்லாம போச்சுடா. நாளைக்கு பாரு’ன்னு சொல்லிட்டு வந்துதான் இந்த பதிவு. அந்த பையனுக்கும் இந்த மேட்சுக்கும் லிங்க் இருக்கு. அது பதிவின் இறுதியில் வரும். அதனாலதான் அவன் அவதிப்படுகிறான். 

                                            இறுதிப்போட்டிக்கு தயாராகும் தருணம்

அணிக்கு பதினொருபேர் கொண்ட அணி. ஓவர் எட்டுதான். பத்தொன்பது மேட்ஸ்களை இரண்டு நாட்களில் முடிக்கவேண்டும் என்பதற்காக அந்த ஏற்பாடு. மேட்ஸ் ஆரம்பமாவதற்கு தயாரான வேளையில் டீம் பிரித்ததில் குளறிபடி இருப்பதாக ஆளாளுக்கு வாய்த்தர்க்கம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஊரில் 55 வருட வயசை கொண்ட கெனடி விளையாட்டுக்கழகம்தான் ஏற்பாட்டை செய்திருந்தது. கழக நிர்வாகிகளால்தான் டீம் பிரிக்கப்பட்டிருந்தது. ஆறு டீமும் ‘எங்கள் டீம் நல்லம் இல்லை, எங்கள் டீம் நல்லம் இல்லை என்று சொன்னால், என்ன அர்த்தம். இவனுகள் பஞ்சாயத்தை பார்க்கிற நேரம். என்னோட மண்டை காய்ஞ்சு போச்சு. கழக நிர்வாகிகள் என்னுடைய நண்பர்கள் என்பதாலும், டீம் பிரிப்பில் எனக்கு சம்பந்தமில்லை என்பதாலும் அணித்தலைவர்களை அழைத்து சமரசம் செய்யும் பொறுப்பு என்மேல் விழுந்தது. பேசியபிறகு ஏற்றுக்கொண்டு விளையாட தயாராகிவிட்டார்கள். அப்பொழுது ஒருத்தன் சொல்கிறான் ‘ மாஸ்டர் உங்க அட்வைஸை கேட்டு காதால ரத்தம் வாறதவிட. விளையாடி தோத்துப்போறது எவ்வளவோ மேல் எண்று நினைச்சுத்தான் எல்லோரும் விளையாட கிளம்பிட்டாங்கள்’. இப்படியொரு அதிரடியான தாக்குதலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனை அப்படியே முறைத்துப்பார்க்கிறேன். திரும்பிபார்த்து சிரித்தபடி நகர்ந்தவன் ‘ இனிமே எங்க பிரச்சினை என்றாலும் நீங்கதான் மாஸ்டர் பஞ்சாயத்து பண்ணனும்” என்று மறுபடியும் சீண்டிவிட்டு ஓடிப்போகிறான். இவன் உண்மையத்தான் சொல்றானா? இல்லை நம்மளை பகிடி பண்றானா? ஒண்ணுமே புரியமாட்டேங்கிதே. மவனே எனக்கு அம்பயர்க்கு நிக்க ரூல்ஸ் தெரியாது. இல்லாட்டி உனக்கு வைப்பன்டி ஆப்பு’ மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
            எல்லோருக்கும் கிண்ணமாம்.

விளையாட்டு ஆரம்பித்தது. முதலாவது…இரண்டாவது..ஐந்தாவது என ஒருமாதிரியாக நகர்ந்து கொண்டிருக்கையில்தான் சினேகிதன் ஒருவன் அருகில் வந்து அமர்ந்தான். செம ஜாலி பார்ட்டி. கமென்ட் பண்ணினானென்றால் நூறு விழுக்காடு காமெடி கயரெண்டி. அப்போது லேசாக ஆரம்பித்தோம். இந்த ஓவருக்கு பத்து ரன்னுக்கு மேல் எடுப்பார்கள் என்பேன். அவன் இல்லை என்பான். அடுத்த இரண்டு ஓவருக்குள் மூன்று விக்கெட்டுகள் இழக்கப்படும் என்பான். இல்லை ஒன்று என்பேன் நான். இப்படியாக மாறி மாறி சன்மானம் இன்றி பந்தயம் கட்ட ஆரம்பித்தோம். ஜெயித்தவர் மகிழ்ச்சியில் கையை உலுக்கி சந்தோஷப்பட்டுக்கொண்டோம். ஆறாவது மேட்சில் தொடங்கிய பெட்டிங் சில மேட்ஸ்கள் தவிர்த்து மற்ற எல்லா மேட்சுகளிலும் தொடர்ந்தது. சில மேட்ஸ் மிஸ்ஸானதுக்கு காரணம் என்னவென்றால் பந்தயம் கட்டும் நண்பனும் ஒரு டீமில் விளையாடிக்கொண்டிருக்கிறான். அடங்கொய்யாலேங்கிறீங்களா? என்ன செய்றது. சும்மாதானே. விளையாட்டின் போக்கை அவதானித்து கெஸ் பண்ணின அணிகள் செமி பைனலை அடைந்தபோது. எந்த டீம் வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு எனக்குள் ஏற்பட்டிருந்தது ஆச்சரியமாகவே இருந்தது.
                                                                      களம்

செமி பைனலும் முடிந்து இறுதிப்போட்டி. மாலை நான்கு மணிவாக்கில் ஆரம்பமாகிறது. இரண்டு அணிகளின் கப்டனும் இருபது வயசுக்காரர்கள். இருவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ஒருவன் இடப்பக்க துடுப்பாட்ட வீரர். திசையை மாற்றி வலப்பக்கமே கூடுதல் சிக்ஸர்களை அடிக்கும் திறமை வாய்ந்த வீரர். அதேபோன்று மற்றைய அணியின் கப்டன் வலப்பக்க துடுப்பாட்ட வீரர். இடப்பக்கமாக அதிக சிக்ஸர்களை அடித்தவர். இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள். கடந்த போட்டிகளில் அதிகமாக சம அளவில் ஜொலித்தவர்கள். இறுதிப்போட்டிக்கு அணியை கொண்டுவந்து சேர்த்த பெருமை அவர்களது துடுப்பாட்டத்திற்கு உண்டு. அதனால்தான் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருந்தது. போட்டி ஆரம்பித்து இடக்கை கப்டனின் அணி மற்றைய அணிக்கு எழுத்தியிரண்டு ஓட்டங்களை டார்கெட்டாக நிர்ணயித்தது. இப்பொழுது மற்றைய அணியின் துடுப்பாட்டம் ஆரம்பமானது. எங்களது சூதும் தொடங்கியது. துடுப்பாட்டம் செய்யப்போகின்ற அணியில்தான் எனது சூதாட்ட தோழனும் இருக்கிறான். அவன்தான் இறுதி பேட்ஸ்மேன். போலரும் இல்லை. பதினொராவது ஆளென்று வைத்துக்கொள்ளுங்களேன். இந்த தடவை இருவருக்கும் சூதில் பதட்டம் தெரிந்தது. நான் ‘ உங்கள் அணிதான் ஜெயிக்கும்’ என்றேன். நண்பன் குழம்பிவிட்டான். காமெடி சிரிப்பு சிரித்துக்கொண்டே ‘ என்ன சிக்கல்றாது. என்ர அணி தோற்கும் என்டா நான் பெட் கட்டுற? எப்புடிடா?’ என்றான். ‘நீ ஏன் தோற்பதற்கு பெட் கட்டுறாய். பீல்டிங் செய்யுற அணி வெல்லும் என்று கட்டு’ என்றேன். என்னை மேலும் கீழுமாய் பார்த்தவன் ‘ ‘தரமாய் செய்யுறாய். ஆனா இந்த தரம் தோற்கிறவர் ஏதாவது செய்யணும்’ என்றான். என்னவென்று நீயே சொல் என்றதும். விளையாடுன களைப்புக்கு ஒரு லீட்டர் கோக். என்றான். ஓகே என்றேன்.
                                            இடக்கை கப்டன்             

போட்டி பலத்த கைதட்டல், ஏமாற்றம் என நகர்ந்து இரண்டு விக்கெட்டுகள் மாத்திரமே எஞ்சி இருக்க, நான்கு பந்துகளுக்கு எட்டு ஓட்டங்கள் தேவை என்ற நிலையை அடைந்தபோது, அழகாக மேட்ஸை நகர்த்திக்கொண்டிருந்த அந்த பதினாறு வயது சிறுவனின் கையிலேயே அணியின் வெற்றி தங்கியிருந்தது. ஆம் அந்த சிறுவன்தான் நேற்று என்னை கலாய்த்தது. யாராவது ஆட்டமிழந்தால் எனது சூதாட்ட நண்பன் களமிறங்க வேண்டும். டென்சனாகி கடவுளை பிரார்த்திக்கிறான். ‘தோத்தாலும் பரவாயில்லை. யாரும் அவுட்டாகிரக்கூடாதுடா சாமி’. என்ன கொடுமைடா இது. நான்கு பந்தில் முதலாவது பந்து வீசப்படுகிறது. ஓங்கி அடிக்கிறான். பந்து மேலெழுந்து எல்லைக்கோட்டை தாண்ட முனைகிறது இருவர் பிடிக்க ஓடுகிறார்கள். ஒரு களத்தடுப்பாளன் இருகைகளையும் மேலே நன்றாக உயர்த்தி பந்தை பிடிக்கிறான். அவனது கால்கள் எல்லைக்கோட்டில் படுகிறது. எங்கள் பக்கம் நின்றவர்கள் ‘சிக்ஸர்’ என கூக்குரலிட்டு கத்த களத்தடுப்பாளர்கள் இருவரும் இல்லை என்று கத்தி ஓடிவர அம்பயரால் எதுவும் தீர்மானிக்க முடியாமல் போனது. கட்ஸ் பிடிக்கப்பட்ட இடத்தை நோக்கி அம்யர் இருவரும் விரைய நாங்களும் அந்த இடத்திற்கு ஓடினோம். அந்த பக்கத்தில் நின்றிருந்த பார்வையாளர்களிடம் தீர விசாரித்த பிறகே அம்பயர் முடிவை அறிவித்தார். ஆம் சிறுவன் அவுட். துடுப்பாட்ட அணியினரின் முகங்கள் வாடிவிட்டன. எங்கள் பக்கம் இருந்து பார்த்தபோது எல்லைக்கோட்டில் கால் பட்டமாதிரி தெரிந்ததால் வந்த சந்தோஷம். வந்த தடம் தெரியாமல் ஓடிவிட்டது. இவங்க தோத்தா சோடா வாங்கணும் என்கிற கவலையெல்லாம் இல்லை. மிக நன்றாக ஆடிய சிறுவனின் ஆட்டமிழப்பு ஏதோ ஒரு கலக்கத்தை என்னுள் ஏற்படுத்தியிருந்தது. மூன்று பந்துகள் மிகுதி. சூதாட்ட நண்பனை அழைத்து கப்டன் நிறைய அட்வைஸ் சொல்லி அனுப்புகிறான். களத்துக்கு சென்ற நண்பனின் கால்களுக்கிடையே ஒரு பந்து செல்கிறது. இரண்டாவது பந்தை ஓங்கி அடிக்கிறான். துடுப்பு மட்டையை தவிர உடம்பில் எல்லா இடங்களையும் தடவி காலடியில் பந்து விழுகிறது. இறுதிப்பந்து ஸ்டெம்பை பதம் பார்க்கிறது. நான் தோற்றுவிட்டேன்.
இறுதியாக களமிறங்கும் எனது சூதாட்ட நண்பனுக்கு விளக்கமளிக்கும் வலக்கை கப்டன்.

                              இவன்தான் அவன், இந்த பதிவுக்கு காரணமானவன்.

2 comments:

  1. ஆகா... என்னவொரு விறுவிறுப்பு...! பதினாறு வயது சிறுவன் அவுட் ஆனது தான் சிறிது வருத்தமாக இருந்தது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா

      Delete