Tuesday, February 11, 2014

                                                                                                                                                                   
                                                                                                                                                                  
 

அண்மையில் முகப்புத்தகத்தில் போஸ்டர் ஒன்றை காணக்கிடைத்தது. அது குறும்படம் தொடர்பானது. ஆம் சங்கர்ஜனின் ‘ஆவியா?’ குறும்படத்துக்கான போஸ்டரை அப்லோட் செய்திருந்தான் பதினாறு வயது நிரம்பிய என் மாணவன். மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் கர்வம் தெறிக்கத்தான் செய்கிறது. ஆறு வருடங்களுக்கு முன்பு தரம் 06 இல் கல்வி கற்கும்போது அவனது கணித வாத்தியார் நான். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அவனுடன் வகுப்பறையில் காலம் கடந்தாலும் மூன்று தடவைகள் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்திருக்கிறேன். இலவச தனியார் கல்விக்கூடம் ஒன்றில் மாலை நேர கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்காக வருடத்துக்கொருமுறை கலைவிழா நடைபெறும். பாட்டு, நடனம், நாடகம்,வில்லுப்பாட்டு வேறு நிகழ்வுகள் என சுமார் ஐந்து மணித்தியாலங்கள் களை கட்டும். இதற்கான பயிற்சியை ஆசான்கள் மேற்கொள்வார்கள். மாணவர்கள் மட்டுமே பங்காளராக இருப்பார்கள். அப்படித்தான் நான் டான்ஸ் மாஸ்டரானேன். அவனை வேஷ்டி கட்டவைத்து ‘வாடா மாப்ளே வாழைப்பழத்தோப்பிலே’ பாட்டுக்கு ஆட வைத்தபோது மேடையில் வைத்து வேஷ்டி அவிழ்ந்ததும்,. அவிழ்ந்த வேஷ்டியை கீழே விழாமல் காப்பாற்றிக்கொண்டும் நடனத்தையும் வெற்றிகரமாக ஆடி முடித்த அவனது புத்திசாலித்தனமான செயற்பாடு இன்னும் நினைவில் நிற்கிறது.

அவன்தான் இப்பொழுது ‘ஆவியா?’ குறும்படத்தின் உரிமையாளன். போஸ்டரை பார்த்ததும் அவனை தொடர்புகொண்டபோது நான் அறிந்த விடயங்கள். சக்தி ரிவியின் குறும்பட போட்டிக்காக படத்தை எடுத்திருக்கிறான். எடுப்பதற்கு உந்துதலாக இருந்தது விவேகானந்தா சனசமூக நிலையம் எடுத்திருந்த ‘நம்ம நாடே போதும்’ குறும்படம். இன்னும் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. போன்ற தகவல்கள்.


எனக்கு ஆர்வம் தலைக்கேறிக்கொண்டிருக்கிறது. இந்த பிரதேசத்திலே எத்தனையோ கலைஞர்கள் இருந்தும் யாரும் செய்ய முன்வராத விடயத்தை சிறுவன் ஒருவனாக முயற்சித்திருக்கிறான் என்ற பெருமிதம். படத்தை பார்த்துவிடவேண்டும் என்ற முனைப்பு மட்டுமே. விமர்சிக்கும் சிந்தனையில்லை. படத்தை பார்த்து கருத்து சொல்லுங்க மாஸ்டர் என்றான். அதிகாலை 04.30 மணிக்கே நேரம் சரியாக வந்தது. ஒன்று இரண்டு மூன்று நான்கு முறை பார்த்தேன். சரியாக பத்து நிமிட படம். கன்னி முயற்சியாகினும் நிறைய ஆளுமைகளை படம் தாங்கியிருந்தது. கமெரா கோணம், கதையில் ட்விஸ்ட், பொருத்தமான பீஜிஎம், அருமையான எடிட்டிக் என மிகக்குறைந்தளவான மூலதன வளத்தை கொண்டு  (மிகக்குறைந்தளவு என்று சொன்னால் ஒரு சின்ன கைக்கமெரா,சாதாரண எடிட்டிங் சொப்ட்வயர்)ஸ்டைலிஷாக படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். குறிப்பிடத்தக்களவு வளங்கள் இருந்திருந்தால் நிச்சயமாக புதுமுக இளம் படைப்பாளி என்று நம்பமுடியாமல் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.கமர்ஷியலான சப்ஜெக்ட்டை அசால்ட்டாக எடுக்கக்கூடிய திறமை இருப்பதை ஒரு ரசிகனாக என்னால் உணர முடிந்தது.

படம் பார்த்து முடித்தவுடன் போன் போட்டு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சதீஸ் மற்றும் அனுராமையும் தொடர்புகொண்டு மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் கூறினேன். இது ஒரு புதியவனின் முயற்சியா என்ற சந்தேகம் என்னுள் ஆழமாக வேரூன்றியிருந்தது. அதனை நிவர்த்தி செய்யும் முகமாக வினாவொன்றை அவனிடம் தொடுத்தேன். பல படங்களை பார்த்து வந்த அனுபவ அறிவென்று பதில் கிடைத்தது. எவ்வளவு ஆழமாக காட்சிகளை உள்வாங்கி ரசித்திருக்கிறான் என்பதை புரிந்துகொண்டேன். ரசித்தது மட்டுமில்லாமல் அதனை அழகாக பிரசவித்தும் இருக்கிறான்.

விமலின் எழுத்தில் உருவான ‘நம்ம நாடே போதும்;’ இந்த பிரதேச இளைஞர்களுக்கு படைப்புக்களில் ஆர்வம் ஏற்பட வழிவகுத்துவிட்டது. அந்த அணியில் முக்கிய பாத்திரமேற்றிருந்த ரமணன் அவர்களை பாராட்டியே தீரவேண்டும்.

இப்பொழுது ஆவியா ட்ரெயிலரை வெளியிட்டுள்ளார்கள். விரைவில் குறும்படத்தினை வெளியிட உள்ளதாக அறித்துள்ளனர். இதற்கான முயற்சிகளை சந்ரு அவர்கள் மேற்கொண்டு வருகின்றார் என அறியக்கிடைத்தது. அனைவருக்கும் எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படைப்புக்களை உருவாக்கத்தொடங்கியுள்ளார்கள் இனிமேல் தானாகவே இலக்கியத்தரம்மிக்க படைப்பாளிகள் வெளியே வருவார்கள். அந்த படைப்பாளிகள் இவர்களாகவும் இருக்கலாம்.

5 comments:

 1. உங்களின் ஊக்குவிப்பு மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும்...

  நீங்கள் இவ்வளவு நாள் எங்கே போனீர்கள்... நானும் "கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல." - பகிர்வை...! ஹா... ஹா...

  அவ்வப்போது தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் ஐயா, உங்களின் ஊக்குவிப்பு வலைப்பதிவர்களுக்கு உற்சாகமாக இருப்பபதுபோலவே.

   வேலைப்பழு மிக அதிகமாச்சு. நாட்டின் பொருளாதார தொகைமதிப்பு வேலைத்திட்டத்தில் அலுவலக வேலை அதிகமாச்சு. நிச்சயமாக அடிக்கடி வருவேன்.

   Delete
  2. உண்மையாக அண்ணா எல்லோராலும் முடியாத விஷயம் நம்ம பொடியன் செஞ்சிருக்கான் நானும் படம் பாரத்தன் என்னா வில்லத்தனம்... Videoo View, BGM எல்லாமே டக்கரா இருக்கு.. பேருல இருக்க போல அடுத்த சங்கரா இருப்பானோ

   Delete
  3. உண்மையாவே எல்லாராலயும் முடியாத காரியம் நம்ம பொடியன் செஞ்சிட்டான் நானும் படம் பார்த்தன் கன்னி முயற்சியு இப்பிடி வெற்றியா இருக்கு பேருல ஈரக்க போல அடுத்த சங்கர் தானோ தெரியல்ல..

   Delete
  4. நிச்சயமாக வேணு. உங்களைப்போன்றவர்களின் ஆதரவும் ஊக்குவிப்பும் அவர்களுக்கு டானிக்தான்.

   Delete