Sunday, June 9, 2013

 ஒரு வாரம் ஹாஸ்பிட்டல் பக்கம் நடமாட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அங்கே ஏற்பட்ட அனுபவங்கள் மனக்கசப்போடு ஆரம்பித்து மகிழ்ச்சி, கவலை,புதிய அறிமுகங்கள், புதிய விடயங்கள் என கமர்ஷியல் சப்ஜெக்டாக அமைந்திருந்தது. அவற்றை கட்டுரை வடிவமாக்காமல் பிட்டு பிட்டாக தந்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று பக்கத்து வீட்டு பாப்பா சொல்லிச்சு. பாப்பான்னா 22 வயசு பொண்ணு. அம்புட்டுதான். மீற முடியுமா? ட்றை பண்ணித்தான் பார்ப்போமே. இழப்பதற்கு ஏதும் இல்லையென்கிற தைரியம். புது முயற்சி. கொஞ்சநாளா இப்பிடித்தான் சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் புலம்ப வேண்டியிருக்கு. என்னையே என்னால் நம்ப முடியவில்லை. பிட்டுக்குள் போவோம்.

27 வயசு மதிக்கத்தக்க ஆண் நர்ஸ் ஒருத்தன் நோயாளிக்கிட்ட நடந்துகிட்ட விதம்தான் மனக்கசப்பை ஏற்படுத்திய முதல் அனுபவம். படிச்சவங்க மாதிரி தெரியுறவங்ககூட சாதாரணமாகவும் பரம அப்பாவிகளிடம் (படிப்பறிவில்லாத விடயம் புரியாத மனிதர்கள்) முரட்டுத்தனமாகவும் பேச்சிலும் செயலிலும் நடந்துகொண்ட முறையை பார்த்தபொழுது அந்நியன் எனக்குள் புறப்பட்டு ஓங்கி ஒரு அறை விடச்சொன்னான்.அப்படி ஏதும் நடந்துச்சுன்னா நம்ம சார்பில இருக்கிற ஆளுக்கு தப்பா ஊசியை போட்டுட்டானென்றால் என்ன செய்வதென்ற பயம். சம்பந்தமே இல்லாத சாத்தியப்படாத விடயத்திற்காக பயம் தொற்றிக்கொண்டதால் அந்நியன் ஓடிவிட்டான். இவர்களைப்போன்றவர்களை திருத்துவதற்கு வழி ஏதும் இருந்தால் சொல்லுங்க மக்காள், முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே.


இரண்டாவது நாள் 40 வயது மதிக்கத்தக்க பெண் நர்ஸ். எவ்வளவு அன்பாக ஆறுதலா ஒவ்வொருவர் அருகிலும் சென்று நலம் விசாரித்து மருந்து மாத்திரை கொடுத்து, சிரித்த முகத்துடன், பார்ப்பதற்கே எவ்வளவு ஆனந்தமாக இருந்தது. படுபாவி அவன்மேல் இருந்த கடுப்பையெல்லாம் காணாமல் போகச்செய்துவிட்டார் அந்த அம்மணி. தாதித்தொழில் மீது ஒரு அபரிதமான பிடிப்பு ஏற்பட வைத்துவிட்டாரென்றே சொல்லலாம். சிறுவன் , தாத்தா , இளைஞன் என பல படி வயதுக் குரூப்களை ஏந்தியபடி இருபத்தைந்து கட்டில்களை கொண்டிருந்த அந்த ஹால், அம்மணி ட்ய+ட்டி நேரம் அவ்வளவும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் கமல் உள்ளே இருந்ததுபோல் கலகலப்பாக காணப்பட்டது. சிறுவன் நைட்; தூக்கக்கலக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்த கதை, தாத்தா கனவில் புலம்பிய கதை என ஜாலியாக நர்ஸ் அம்மணியோடு சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். எதிர் எதிர் துருவங்களாக இரண்டு அனுபவங்களை பெற்றிருந்தேன்.


வெளிநோயாளர் பிரிவில் டாக்டர் ஒருத்தர் நோயாளர் ஒருவரை பரிசோதித்துக்கொண்டிருந்தார். டாக்டரை சந்திக்க சென்ற நான் அருகில் நின்றிருந்தேன். அப்பொழுது திடீரென இரு பெண்கள் உள்ளே நுழைந்தனர். தாயும் மகளும் என்பதை ஊகித்துக்கொண்டேன். தாயின் முகத்தில் ஏகப்பட்ட பதற்றம். மகளுக்கு அவ்வளவாக இல்லை. ஏதோ விபரீத கேஸ் என புரிந்தது. டாக்டரும் நிலமையை புரிந்துகொண்டார் போலும். இருந்தவருக்கு சிட்டை கொடுத்துவிட்டு அவர்களை உட்காரவைத்து விசாரித்ததில், மகள் இறந்த பல்லி விழுந்த டீயை குடித்துவிட்டதாக கூறப்பட்டது.   டாக்டர் உடனே எதுவித செக்கப்பும் செய்யாமல் , தயக்கமும் இல்லாமல் சாதாரணமாக ‘பிரச்சினை ஒன்றுமில்லை. நீங்க வீட்ட போங்க’ என்றார். தாய் டென்சனாகி கத்த ஆரம்பித்துவிட்டார். டாக்டருக்கும் கோபம் வந்துவிட்டது. டாக்டருக்கும் கோபம் வந்துவிட்டது. தாயைப்பார்த்து ‘ நீங்கள் தமிழ்ப்படம் அதிகமாக பார்க்கிறீர்கள். அதனாலதான் இவ்வளவு பிரச்சினை. சத்தம் போடாமல் வெளியே போங்கள்’ என்றவர் மகளைப்பார்த்து ‘ இறால் விழுந்த டீயை குடிப்பீங்களா?’ என கேட்டார். பிள்ளையும் ஆம் என்று லேசாக தலையாட்டியது. ‘ ‘அதுபோலத்தான் இதுவும் பயப்படாம வீட்ட போங்க’ என்றவர் என்னிடம் விடயம் என்னவென வினவினார். தயங்கி தயங்கி அவர்கள் எழுந்து சென்றார்கள். எனக்கும் மேட்டர் புதுசாகவே பட்டது.


அழகான சூழலுக்காக முறையாக கட்டமைக்கப்ப்பட்டு நடப்பட்டிருந்த ப+ஞ்செடிகளுக்கு துப்புரவு தொழிலாளி நீர் பாய்ச்சிகொண்டிருந்தார். அவரிடம் பேச்சுகொடுத்தேன். நோயாளிகளின் மனநிலையை அவரும் புரிந்திருந்தார். நோயாளிகளின் மனநிலையை மாத்திரமல்ல அங்கு கடமை புரியும் அத்தனை ஊழியர்களினதும் மனநிலையும் அவருக்கு தெரிந்திருந்தது சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த சூழலை நேசித்த அம்மனிதனை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அவரிடம் நீர்க்குழாயை வாங்கி நீரை பாய்ச்சும்போது ஏதோ ஓர் இனம்புரியாத திருப்தி ஏற்பட்டதை மறக்கமுடியாது. நெஞ்சமெங்கும் இருந்த கனம் அகன்ற தருணங்களில் அதுவும் ஒன்று.

எத்தனை விதமான மனிதர்கள் நோயை கண்டு பயப்படும் குழந்தைத்தனமுள்ளவர்கள், அலட்சியமாக இருக்கும் வாழ்வு வெறுப்பு மனநிலை உடையவர்கள் நலம் விசாரிக்கும் தாய் தந்தை, மனைவி, பிள்ளைகள், சகோதர்கள், உறவுகள், நண்பர்கள் என அந்த களம்…. என்னவென்று சொல்வது. ஆட்களின் மனநிலையை அடையாளம் காணும் இடமா? இல்லை இவ்வளவுதான் வாழ்க்கை என்று ஞானம் போதிக்கும் மடமா? என்பதே என் முன்னிருந்த கேள்விகள். விடை காண இப்பொழுதும் முயற்சிக்கிறேன்.


வீடு வந்து சேர்ந்து இரண்டாம் நாள் வந்த செய்தி. மிகவும் கஷ்டமாக இருந்தது. நான்கு கட்டில் தள்ளியிருந்த கனவுகண்ட தாத்தா மரணித்துவிட்டாராம்.

13 comments:

 1. பதிவு முழுக்க Font ஏதோ மாற்றி உள்ளது... கவனிக்கவும்...

  Example : பதிவின் முதல் இரு வரிகள் கீழ் உள்ளவை...

  xU thuk; `h];gpl;ly; gf;fk; elkhl Ntz;ba re;ju;g;gk; Vw;gl;lJ. mq;Nf Vw;gl;l mDgtq;fs; kdf;frg;NghL Muk;gpj;J kfpo;r;rp> ftiy>Gjpa mwpKfq;fs;> Gjpa

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நட்சத்திர கருத்துரையாளருக்கு நன்றிகள்.

   நன்றி ஐயா, பதிவிட்ட உடனேயே தவறை கண்டுபிடித்து உதவி விட்டீர்கள். உங்களது தயவில்தான் நம்ம வண்டி ஓடுது. உங்களது உதவியை என்றும் எதிர்பார்க்கின்றேன்.

   கோடானுகோடி நன்றிகள்.

   Delete
  2. யுனிகோட்டில் ஏற்பட்ட சிறு தவறுக்கு உதவிய சந்ருவுக்கும் நன்றிகள் http://shanthru.blogspot.com/

   Delete
 2. ஹாஸ்பிடல் பிட்டுகள் மூலமா உங்க அனுபவத்தை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள் ..கடைசி பாராவுக்கு முந்தைய பாராவில் ,வந்த ஞானம் ,முதல் பாரா 'பாப்பா'வினால் போனமாதிரி படுகிறதே ..ஜாக்கிரதையாக இருங்கள் ,மீண்டும் ஆஸ்பத்திரிக்கு போகும் நிலை வந்துவிடக் கூடாது !

  ReplyDelete
  Replies
  1. எச்சரிக்கைக்கு மிக்க நன்றி சார். நம்ம நிலைவரம் அங்கேவரைக்கும் புரியுது....ம்ம்

   Delete
 3. 'டீ'யில் பல்லி விழுந்ததை கூட தெரியாதளவிற்கா தமிழ்ப் படம் இருந்தது...?!!

  அடையாறு புற்றுநோய் ஆஸ்பிட்டலில் ஒரு நாள் இருந்தால் பல ஞானங்கள் கண்டிப்பாக கிடைக்கும்... (எல்லாம் அனுபவம் தான்...!)

  ReplyDelete
  Replies
  1. தமிழ்ப்படங்களில் பல்லி மேட்டரை தவறுதலாக சித்தரித்திருந்ததாக கூறியிருந்தார் ஐயா. அதுசரி கன்சர் ஹாஸ்பிட்டலுக்கு இப்பவே போயாச்சா?..ஹி..ஹி...

   Delete
 4. மருத்துவமனைகளில் கவனிக்க, கவனிக்க இன்னும் எழுத எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும். சுஜாதாவின் காகிதச் சங்கிலிகள் படித்திருக்கிறீர்களா? இன்னொரு கதை கூட உண்டு. தலைப்பு நினைவில்லை!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கூறியபிறகுதான் மென்நூல் வடிவில் புத்தகத்தை பெற்றுவிட்டேன். சீக்கிரம் முடிச்சிரவண்டியதுதான்.

   Delete
 5. அனுபவப்பகிர்வுகள்....

  ReplyDelete
 6. மனதை வருடிய ஆக்கம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கஸ் மம். வருகைக்கு நன்றி.

   Delete