Saturday, June 15, 2013

3:59 PM
34
நான் உன்னை எப்போது காதலிக்க ஆரம்பித்தேன் என்றே நினைவில்லை. கொஞ்ச கொஞ்சமாக உள்நுழைந்து இப்போது மனசு முழுவதும் பரவிக்கிடக்கிறது உன் நினைவுகள். வெறும் பார்வைகளால் மாத்திரம் நான்கு வருடங்கள் கடந்துவிட்டிருக்கின்றது. உனக்கு தெரியும் நான் உன்னை காதலிப்பது. நான் காதலிக்க ஆரம்பித்த நாள்முதலே உனக்கு தெரியும் என்பதை நான் அறிவேன். உன் கண்கள் உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அதனை புரிய வைத்தது. அந்த பார்வை நீயும் என்னை காதலிப்பதாகவே உணர்த்தியது. இருந்தாலும் காதலை வெளிப்படுத்த பயம். நான் உன்னிடம் காதலை சொல்ல நீயோ ஏதேதோ காரணம் சொல்லி மறுத்துவிட்டால், எனக்கு தாங்கிக்கொள்ளக்கூடியளவு சக்தி இருக்குமென்று நம்பிக்கையில்லை. அவ்வளவு தூரம் நீ என்னுள் ஆழமாக வேரூன்றிவிட்டாய்.

இது என்ன விந்தை என்று புரியவில்லை. உருவமில்லா உணர்வுக்குத்தான் எத்தனை சக்தி. உன்னோடு பேசியதில்லை. பழகியதில்லை. உன் செயற்பாடுகளை தூரநின்று அவதானித்திருக்கிறேன்.. கேள்வியுற்றிருக்கிறேன். தினமும் இல்லை..இல்லை தொடர்ந்து இடைவிடாமல் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் போல் தோன்ற ஆரம்பித்தது. உறவுகள், நண்பர்களை மறந்தேன் உனைத் தரிசிக்கும்போது. படிப்பை மறந்தேன் உனை நினைக்கும்பொழுது.

நான் உன்னோடு சேர வேண்டும். நான் உன்னை அடைய வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று நினைத்தேனோ அவற்றையெல்லாம் செய்தேன். நான் படித்து நல்ல நிலைக்கு வந்தால் உன்னோடு சேரலாம் என்று ஊகித்துக்கொண்டேன். என் சக நண்பர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிய அட்வைஸ் அப்பொழுது எனக்கு முற்றுமுழுதாக பொருந்தியது. நான் எல்லோரையும் மதித்து நடக்கும் பண்புள்ளவன் என்பதை நீ அறிவாய். ஆனால் உன் விடயத்தில் யார் பேச்சையும் கேட்கும் நிலையில் நான் இல்லை. என்னாச்சு எனக்கு?

உனக்குள் எப்படியோ விழுந்துவிட்டேன்
மீண்டுவர முயற்சிக்கிறேன்
ஆனால் முடியவில்லை. ஏதோ தடுக்கிறது
ஓ… அதுதான் காதலோ?

எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் தாயின் அரவணைப்பிலே அதிகம் அகமகிழ்ந்திருக்கிறேன். பரீட்சையில் அதிக மார்க் வாங்கும்போதும், விளையாட்டுக்களில் முதன்மை பெறும்போதும், ஆசான்கள் நண்பர்கள் பாராட்டும்போதும், விரும்பிய பொருளை வாங்கும்போதும் உச்சி குளிர்ந்து பரவசம் அடைந்திருக்கின்றேன். எவ்வளவு சந்தோஷங்கள், உற்சாகங்கள், ப+ரிப்புக்கள். அத்தனை உளவியல் மாற்றங்களையும் உன் நினைவுகள் ஒரு நொடியில் விஞ்சிவிட்டதே. என்ன ஆச்சர்யம்? அது வரமா? சாபமா? என்றே புரியவில்லை.

என்னை கலாய்ப்பதாக் நினைத்துக்கொண்டு நண்பர்கள் உன் பெயரை சொல்லி அழைக்கும்போது ஏற்படுகின்ற ஆனந்தம் இருக்கிறதே. அப்பப்பா… சொல்லி புரியாது. ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் நண்பர்களை கடிந்திருக்கிறேன். அதேநேரம் மீண்டும் உன் பெயரை சொல்லி என்னை அழைக்கமாட்டார்களா என ஏங்கியிருக்கிறேன். இதே அனுபவம் உனக்கும் ஏற்பட்டதாக அறிந்தேன். உனது தோழிகள் உன்னை என் பெயர்கொண்டு அழைக்கும்போது நீ புன்னகைப்பதாக கூறினார்கள். நீயும் என்னை காதலிக்கிறாய் என்பதற்கான ஆதாரமாக அதனை கருதினேன்.


மலர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். காதலை வெளிப்படுத்தும் அடையாளமாக ரோஜா மலர்கள் சித்தரிக்கப்பட்ட பல சினிமாக்களை பார்த்திருக்கிறேன். காதல் கதைகளை படித்திருக்கிறேன். அதனால் நானும் அந்த வழியில் முதல் முயற்சியில் ஈடுபட்டேன். உனக்கு ஞாபகம் இருக்கிறதோ தெரியவில்லை. நான் உன்னை காதலித்த முதல் வருடம் பாடசாலையில் அசம்பிளிக்கு நீ சென்றுவிட்டாய். வாரக்கணக்காக திட்டமிட்டு அந்த வேளையை எதிர்பார்த்திருந்து உன் புத்தகப்பைக்குள் அழகிய சிவப்பு ஒற்றை ரோஜா ஒன்றையும் எதுவுமே எழுதாத கவர்ச்சியான காதல் வாழ்த்துமடல் ஒன்றையும் வைத்தேன். உற்ற நண்பன் ஒருவன் மாத்திரமே அருகில் இருந்தான். என்ன முட்டாள்தனம் பார்த்தாயா? நான்தான் ப+வையும் வாழ்த்தையும் வைத்தேன் என்பதற்கு எந்தவிதமான அடையாளமும் அங்கே நான் விட்டுவைக்கவில்லை. காதலுக்கு கண்ணில்லை என்றுதான் கூறுவார்கள் ஆனால் என் செயற்பாடு மூளையும் இல்லை என்பதை காட்டியது. உன்னை காதலிப்பதாக கூறிக்கொண்டு இன்னும் இருவர் உன் பின்னால் அலைவதாகவும் அறிந்தேன். நீ யார் வைத்ததாக எண்ணினாயோ தெரியவில்லை.

எனக்கு மதம் பிடிக்கவில்லை என்று கூறுவேன். இனிமேலும் பிடிக்காது என்றும் கூறுவேன். ஆனால் நீ தாவணியில் தலைமுடியில் மல்லிகை மலர்சூடி கொலுசு சத்தம் லேசாக இதயம் வரை ஊடுருவ, சின்ன சின்ன தங்கங்கள் கழுத்திலும் காதிலும் ஜொலிக்க நீ கோவில் செல்லும் அழகை இரசிப்பதற்காக, வேட்டி கட்டி பட்டையிட்டு பக்திமான் போல் எத்தனை நாள் வேஷமிட்டு உன் பார்வை படும்படி அலைந்திருப்பேன் என்பதை நீ மறந்திருக்க வாய்ப்பில்லை.

கோவிலில் வலம்வரும் தேர் தேரல்ல
என் இதயம்தானடி உண்மையான தேர்
அதில் கடவுள் அந்த சிலையல்ல
நீ … நீ மட்டும்தானடி

யாரோ சொன்னார்கள் என்று என் நண்பன் சொன்னான். நீ வேறு யாரோ ஒருவர் புரொபோஸ் பண்ண ஓ.கே சொல்லிவிட்டாய் என்று. அந்த கணம்… பல இரும்புத்தூண்களை  என்மேல் போட்டு நசுக்கப்படுவதை போல் உணர்ந்தேன். என்னையறியாமலேயே கண்களிரண்டும் குளமாகத் தொடங்கின. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேசையில் குப்புற படுத்துக்கொண்டு நான் அழுததும் நண்பன் ஆறுதல் வார்த்தை சொல்லி சமாதானப்படுத்த முயன்றதுமான அந்த நாட்கள் இப்பொழுதும் என் கண்முன்னே நிற்கின்றன.

நாட்கள் செல்ல செல்ல உன்மேல் பிரியம் அதிகரித்தது. காதலை வெளிப்படுத்தும் தைரியம் மட்டும் வளர மறுத்தது. நண்பர்கள் விடாப்பிடியாக நின்று உன்னிடம் கேட்க முயன்ற பல சந்தர்ப்பங்களில், அவர்களிடம் மிக மோசமான முறையில் நடந்து அவற்றையெல்லாம் தடுத்திருக்கிறேன். பயம். என்னை விட்டு விலகிவிடுவாயோ என்ற பயம். அதனைவிட இப்படி பார்த்ததுக்கொண்டு இரசித்துக்கொண்டு இருப்பது எவ்வளவோ மேல் என்று எனக்கு பட்டது.

சண்டை என்று வந்தால் தோழர்கள் என்னை நம்பித்தான் முன் நிற்பார்கள். அவ்வளவு முரட்டுத்தனமும் தைரியமும் என்னிடம் கொட்டிக்கிடந்தது. ஆனால் உன்னை நேருக்குநேர் நிமிர்ந்து பார்க்கமுடியாத கோழையாக இருந்ததை நீ அறிவாயா? பல மணிநேரம் பயிற்சி செய்து இன்றைக்கு எப்பிடியாவது பேசிவிடவேண்டும் என்று உனை நாடிவந்து உனைக்கண்டதும் பம்மியபடி ஓர் ஓராமாகத்தான் ஒதுங்கியதைதான் அறிவாயா? அந்த நேரங்களில் நான் ஏதோ பேசப்போகிறேன் என்று நீ எதிர்பார்த்திருப்பதைப்போல் எனக்கு தோன்றும். இருந்தும் பிரயோசனமில்லாமல் கடந்த தருணங்கள் அவை.

ஒரு வருடத்திற்கு முன்னர் நீ செல்போன் பாவிக்கதொடங்கியதை அறிந்து உன் நம்பரையும் கைப்பற்றினேன் போன் பண்ணுவேன். நீ ஆன்ஸர் செய்து ‘ஹலோ’ என்று முத்துப்போல் ஒற்றை வார்த்தை உதிர்ப்பாய். நான் பதில் ஏதும் பேசமாட்டேன். மீண்டும் ‘ஹலோ.’ என்று மூன்று நான்கு தடவை சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிடுவாய். அந்த பத்து செகண்டுகளும் உன்னுடன் அருகில் இருந்ததாகவே உணர்வேன். அதிகாலையில் தூக்கத்தை கலைத்து போனை தூக்கி சிணுங்குவாய்.... அதனை எவ்வளவு ஆனந்தமாக அனுபிவித்திருக்கிறேன் தெரியுமா? நீ சாப்பிடும்போது அழைத்திருக்கிறேன். பிஸியாக இருக்கும்போது அழைத்திருக்கிறேன். உன் தோழிகளோடு அரட்டையிலிருக்கும்போது அழைத்திருக்கின்றேன். வீட்டில் டீவி பார்க்கும்போது.. தூங்கும்போது என உன்னோடு வாழ்ந்த சுகத்தை அனுபவித்திருக்கிறேன்.

இத்தனை காலமும் எனக்கு பல அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. நீயின்றி என்னால் வாழ முடியாதென்பதை கண்டுகொண்டேன். எச்சந்தர்ப்பத்திலும் எத்தகைய இடர்வரினும் உன்னை விட்டு விலகவோ உன்னிடம் வெறுப்பு காட்டவோ என்னால் முடியாதென்பதை உணர்ந்துகொண்டேன்.

இனிமேலும் பொறுமைகாக்க முடியாமல்தான் இந்த மடலை வரைகிறேன். போனில் பேசியிருக்கலாம் என்று நீ நினைக்ககூடும். அதுதான் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அந்தளவு தைரியம் என்னிடம் இல்லை. உன் விடயத்தில்; நான் பயந்த சுபாவமுள்ள சிறு குழந்தையாகவே இருக்கிறேன். இந்த கடிதத்தை வாசித்து முடித்தவுடன்; இப்படிக்கு அன்புடன் என்பதற்கு கீழ் எழுதப்பட்டிருக்கும்  என் பெயரை நீ தடவுவாய் என்று நம்புகிறேன். என் உள்மனம் சொல்கிறது ‘நீயும் என்னை காதலித்துகொண்டிருக்கிறாய்’ என்று. நீ தடவும்போது அந்த ஸ்பரிசத்தை நான் உணர்வேன். அதுதான் நம்காதலின் மகிமையாய் இருக்கும்.

என் காதல் ஒருதலைக்காதலானால்
இச்சைக்கு இடமளியேன்.
ஒற்றையாகவே வாழ்வேன்
உன் நினைவுகளுடன்..

நான் உனக்கு முதன்முதல் கொடுத்த ரோஜாவையும் அதனுள் என் காதலையும் பொதித்து அனுப்புகிறேன்.

இப்படிக்கு,
அன்புடன்,
உனக்குள் வரத்துடிக்கும் நான்.

34 comments:

 1. "ஏதோ தடுக்கிறது ஓ… அதுதான் காதலோ?", அந்த பத்து செகண்டுகளும் உன்னுடன் அருகில் இருந்ததாகவே உணர்வேன்" உட்பட ரசிக்க வைக்கிறது காதல் கடிதம்...

  வெற்றி பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா

   Delete
 2. காதலில் வெற்றி பெறவும்
  போட்டியில் பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மையென்று முடிவே பண்ணீட்டிங்களா? வாழ்த்துக்களுக்கு நன்றி

   Delete
 3. அழகான காதல் கடிதம்

  ReplyDelete
 4. அருமை!
  நிச்சயம் உங்களுக்கு காதலிலும் போட்டியிலும் வெற்றி கிட்டும் சகோதரரே!

  வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. அடக்கடவுளே உண்மைன்னு முடிவே பண்ணிட்டிங்களா? ச்சப்பா...

   Delete
 5. அனுபவித்துதான் எழுதியிருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. /.என்னை கலாய்ப்பதாக் நினைத்துக்கொண்டு நண்பர்கள் உன் பெயரை சொல்லி அழைக்கும்போது ஏற்படுகின்ற ஆனந்தம் இருக்கிறதே. அப்பப்பா…//


  ம்ம் சூப்பரா தான் இருக்கும் ..//

  ReplyDelete
  Replies
  1. அங்கேயும் நல்ல அனுபவங்கள் கொட்டிக்கிடக்கிறது போல இருக்கே

   Delete
 7. அருமையான காதல் கடிதம். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். காதலிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 8. கடிதத்துடன் கவிதையும் இணைந்து ஜொலிக்கிறது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. வாழ்த்துகள், அழகான காதல் கடிதல்...

  வெற்றி பெற வாழ்த்துகள்,,,

  ReplyDelete
  Replies
  1. நான் அய்யா இல்லை, சிறு குழந்தை. என் புகைப்படத்தை பார்த்தும் அய்யா என்று கூறலாமா??? குழந்தாய் என்று சொல்லுங்கள்!!! Ting Ting

   Delete
 10. வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள்

   Delete
 11. உணர்வுகளை மொத்தமாக கூறிவிட்டீர்கள். அருமை.

  ReplyDelete
 12. உங்கள் இதயத் தேரில் இருக்கும் சிலை உங்களை ஒற்றை ஆளாக வாழ விடாமல் சீக்கிரம் உங்களை வந்து அடையட்டும்.
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அம்மா.. கொஞ்சூண்டுதான் உண்மை. மற்றதெல்லாம் சும்மா

   Delete
 13. காதலுக்கு கண்ணு இல்லை... கேள்விபட்டிறுக்கிறேன்
  மூளையும் இல்லையா... ஹை புதுசா இருக்கே!
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. //ஓ
  இதுதான் காதல் கடிதமோ!!!!
  அழகு
  வாழ்த்துகள்

  ReplyDelete
 15. பல் நினைவுகளை கிளறி விட்டீர்கள் .....எல்லா காதலனுக்கும் இதே மாதிரி தான் போல ..

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் ஒரு அனுபகவம்தான் பாஸ்

   Delete