Saturday, May 25, 2013

ஆமாங்க எத்தனை நாளைக்குத்தான் மறைக்கிறதும் மனசுக்குள்ள பொத்தி பொத்தி வைச்சிக்கிறதும். அதுதான் இன்னிக்கு எல்லா உண்மையையும் போட்டு உடைச்சிர்றதுன்னு முடிவு பண்ணிட்டன். சிந்தனையில் எச்சில் ஊற ஊற மேலே என்ன சொல்லப்போறேன்னு ஆவலோட நீங்க படிக்க முனையுறது எனக்கு புரிகிறது. அவசரப்படாதீங்க. அதைத்தான் இப்போ சொல்லப்போறனே.பிறகேன் அவதி.

சின்ன வயசிலேருந்து வாசிப்பில் சரியான ஆர்வம் எனக்கு. அம்புலிமாமா கதையும் நானும் பட்டபாடு இருக்கே. ஆத்தாடி சொல்லி மாளாது. ஸ்கூல் விட்டா புத்தக பேக் வீட்டில் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும். லைப்ரரிக்கு ஓடிவிடுவேன். அப்புறம் என்னத்தை கேக்கிறது. லைப்ரரி அக்கா வந்து ‘ப+ட்ட போறம் தம்பி’ என்று சொன்னவுடன்தான் வெளியேறுவது. இப்படியாக காலம் கடந்து வந்த எனக்கு பத்தாவது படிக்கும்போது தினமுரசு மற்றும் மித்திரன் வாரமலர்களை படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. லைப்ரரிக்கு போனால், அந்த நேரத்தில் டிமான்டான வாரப்பத்திரிகைகளாக அவை இருந்ததால் கூட்டம் அலைமோதும். நிம்மதியாக வாசிக்கமுடியாது. ஆளுக்கொரு பக்கத்தை வைச்சிருக்க வேண்டிய நிலை. ஆதலால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவொன்று(எனக்கு) எடுக்கவேண்டியதாயிற்று. அதுதாங்க இரண்டு பத்திரிகைகளையும் சொந்தமாக வாங்குவது. காசுப்புழக்கம் அதிகம் இல்லாத காலம். வீட்டிலும் பத்திரிகை வாங்குவதற்காக காசு செலவிடக்கூடிய பொருளாதார நிலமை இல்லை.ஸ்கூல்ல இன்டர்வல் டைமில் சாப்பிடுவதற்காக வீட்டில் கொடுக்கப்படும் சிறு தொகையை சேமித்து வைத்தால் பத்திரிகை வாங்க சரியாக இருக்கும். வியாழன்று ஸ்கூல் விட்டு வரும்போது பத்திரிகையை வாங்கி வந்து வீட்டில் வைத்து பிரிக்கும்போது ஏற்படுகின்ற பரவசம் ஆனந்தம் ஆஹா….. எவ்வளவு சுகம். புதுப்பத்திரிகையின் வாசம் இன்னும் நினைவில் ஓடிக்கொண்டிருக்கின்றது. 


எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் வாசித்து விடுவேன். முதலில் சினிமாப்பக்கம் ஆரம்பித்தால் அரசியற் கட்டுரைகளை தவிர்த்து அனைத்தையும் வாசித்தபிறகு அரசியற்கட்டுரையையும் வாசிப்பேன். எல்லாம் முடித்த பிறகு அடுத்த வியாழன் எப்போது வருமென்று காத்திருப்பது என காலங்கள் கடக்கையில்தான் ஒரு யோசனை உதித்தது (இப்பதானுங்கோ மேட்டருக்குள்ள வாறன்) அந்த பத்திரிகைகளில் வாசகர்கள் எல்லாம் கவிதை, சிறுகதையெல்லாம் எழுதியிருப்பாங்க. அப்போ நம்மளும் எழுதினா என்ன? என்ற கேள்வி எழுந்தது. செத்தான்டா வாசகன் என்று நீங்கள் மனசுக்குள்ள நினைக்கிறது விளங்குது. விடவில்லை. கவிதைப்போட்டிக்கு கவிதை எழுத ஆரம்பித்தேன். ஒரு ஏழெட்டு கவிதைக்கு பிறகு ‘பயன்பாடு’ என்கிற ஒரு கவிதை செலக்ட் ஆகி (பரிசு பெறவில்லை) நவம்பர் 11 -17 ,2001 அன்றைய பத்திரிகையில் பிரசுரமானது. சந்தோஷம் தாங்க முடியவில்லை.

 அதே காலப்பகுதியில் சிறுகதையும் எழுதினேன். நான்காவதாக எழுதி அனுப்பிய ‘சொன்னால்தான் காதல் ஜெயிக்கும்’ என்கிற சிறுகதை டிசம்பர் 09-15, 2011 பத்திரிகையில் பிரசுரமானது.சிறுகதை தலைப்பை பார்த்து அப்பவே நல்லா முத்தி பழுத்திட்டன் என்பதை புரிந்துகொள்ளுங்கள். கேட்கவா வேண்டும். சொல்லி மாளாது மகிழ்ச்சி. எனது பெயரில் இருந்த சரியாக எழுத வாசிக்க தெரியாத ஒருத்தர் இந்த சிறுகதையை தான் எழுதியதாக புரூடா விட்டு திரிந்தது வேறு கதை. பின்னர் இரண்டு சிறுகதைகள் அனுப்பியும் பிரசுரமாகவில்லை. நான் யோசித்த காரணம் என்னவென்றால் பேனையால் எழுதித்தான் கதை அனுப்புவதுண்டு. எனது கையெழுத்தும் அவ்வளவு தெளிவில்லை. தெளிவில்லை என்றால் அவவ்ளவு மோசமில்லை ஆரம்பத்தில் அழகாக போய்க்கொண்டிருக்கும் இடையில் மலையேறத்தொடங்கிவிடும். இந்த காரணத்தால் செலக்ட் ஆகாமல் இருந்திருக்கலாம். டைப்பிங் வசதி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பின்னர் தரம் பதினொன்றுக்கு வந்தபின் ஓ லெவல் படிப்பும் இறுக்க எல்லாம் விடுபட்டு போனதுதான். திரும்பி வர பன்னிரண்டு வருடமாச்சு.

சொல்ல முடியாதுங்க. தொடர்ச்சியாக அதே பீல்டில் வீச்சுடன் வளர்ந்திருந்தால் பெரிய எழுத்தாளனாகவோ அரசியல் ஆய்வாளனாகவோ வந்திருக்கலாம். பல்லு வெளியால தெரியாம உள்ளுக்குள்ள நக்கல்; சிரிப்பு சிரிக்கிறயளா? உங்க மேல சத்தியமா சொல்றன் சிலவேளை நடந்திருக்கலாம். எனக்கு தெரியும் நம்பமாட்டிங்கன்னு. அதனாலதான் சிவப்பால மார்க் பண்ணி படமாக போட்டிருக்கன் தரவுகளை எடுக்க உதவிய 
நூலகம் க்குஎனது மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கிறன்.

சொன்னா நம்பமாட்டீங்க. பத்தாவது படிக்கும்போதே…….. எழுத ஆரம்பிச்சிட்டேங்க.

10 comments:

 1. தம்பி அந்த கதை எங்கடா

  ReplyDelete
  Replies
  1. அதானே பார்த்தன் ஒருத்தரையும் காணோமே என்று.

   Delete
 2. தம்பி அந்த கதையோ எண்டு நினைச்சன்

  ReplyDelete
 3. இப்போ எழுதுவதற்க்கு என்னதான் தடை. எழுதுங்கள், எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள். உங்கள் எழுத்து நடை எனக்கு ரெம்ப ரெம்பப் பிடிக்கிறது. மிக எளிமையான வார்த்தைப் பிரயோகம் உங்களின் plus point. நான் உங்கள் ரசிகையாகி ரெம்ப நாளாகிவிட்டது. அடுத்த ஆக்கம் எப்போ என்று காவல் இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மம். பெரிய பயத்தை உண்டு பண்ணிவிட்டீர்கள்

   Delete
 4. நீங்கள் நீங்களாகவே இருங்கள். வெற்றியினதும் அழகினதும் ரகசியம் அதுதான். இங்கு ஜேர்மனியில் வெள்ளைக்காரச் சிறுவர்களைப் பராமரிக்கிறேன். தொழில்ரீதியாக வெள்ளைக்காரர்கள் போல் இருக்க முயன்று முயன்று தோற்றுப்போய் நான் நானாகவே (சராசரி 3ம் உலக நாட்டுப் பெண்ணாக) இருக்கப் பழகிக் கொண்டேன். நன்றாகவே வரவேற்க்கப் படுகின்றேன். நன்றாகவே ரசிக்கப்படுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

   Delete
 5. ஏன் இப்போதெல்லாம் நிறுத்திவிட்டீர்கள் தலைவா? தொடருங்கள். வாசிக்க காத்திருக்கிறோம்!

  ReplyDelete
  Replies
  1. நிறுத்தலப்பா.. டைம் கிடைக்கல்ல. இன்னிக்கு வறன். டாக்டர் சப்ஜெக்டோட.

   Delete