அந்தோ பரிதாபம். யுத்த சூழல் மறைந்து உயிர்பயம், மன அழுத்தம் குறைந்து சித்திரை புத்தாண்டு களைகட்டத்தொடங்கியிருந்த அந்த நள்ளிரவில் கோரசம்பவம் நடந்தேறியிருந்தது அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது உண்மையே. தம்பதியினர் இருவர் படுக்கையறையில் வைத்து பொல்லால் அடிக்கப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டமை. எல்லோருக்கும் பல விதமான ஊகங்கள். மீண்டும் இருண்ட யுகமோ என பீதி. திருட்டுக்கான கொலையோ என்ற சந்தேகம், வியாபார பிரச்சினையோ என்ற ஊகம். ஆனால் உண்மை தெரியவந்தபோது கொலையை விட அதிர்ச்சியாகவிருந்தது.
தாய் தந்தை இரு மகள்கள் என ஒரு அழகான குடும்பம். இளைய மகள் தரம் பதினொன்றில் கல்வி பயில்கிறாள். அவளோடு கல்வி பயின்ற ஒரு மாணவனும் அவளும் காதலர்கள். பெண்ணின் தந்தை விடயம் அறிந்து கண்டிக்க, காதலர்களது நண்பர்கள் இருவர் துணையுடன் மொத்தமாக நான்குபேர் திட்டமிட்டு இருவரை படுபயங்கரமாக கொலை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு பிளான் போட்டிருக்கின்றார்கள். பிழைச்சுப்போனதும் அடுத்த பிளானை சக்ஸஸ் பண்ணியிருக்கிறார்கள். தற்போது கம்பி எண்ணுகிறார்கள். பதினாறு வயசு பெண்ணொருத்தி தன் தாய் தந்தையரை கொலை செய்ய துணிகிறாள் என்றால் அதனை என்னவென்று சொல்வது. மூளை பிசகியிருந்தால் அவ்வளவு அற்புதமாக திட்டம் தீட்டியிருக்கமுடியாது. (முழுமையான தகவல் அறிய இங்கே கிளிக் செய்க தகவல் அறிந்தவரையில் இந்த காதல் பிரச்சினையை தவிர வேறு எந்தவொரு துன்பமும் அவளிக்கில்லை. அப்படியென்றால் டீன்ஏஜ் ஈர்ப்பு இவ்வளவு கொடூர மனநிலைக்கு அவளை இட்டு சென்றதா? காமத்தில் சிக்குண்டு மீள முடியாத நிலையால் இது ஏற்பட்டதென்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியிருப்பினும் சமூகத்தால் மன்னிக்கமுடியாத குற்றவாளிகளாகிவிட்டனர் அந்த நான்குபேரும். எல்லோர் கண்ணிலும் கண்ணீரையும் சிந்தனையில் வலியையும் ஏற்படுத்திய அச்சம்பவத்தை யாரால்தான் ஏற்றுக்கொள்ளமுடியும்.
நாம் எல்லோரும் டீன்ஏஜ் காதலை அனுபவித்தவர்கள்தான். யாரும் மறுப்பதற்கில்லை. எவ்வளவு அற்புதமான சுகமான நினைவுகளை கொண்டவை அந்த காதல் கதைகள். அங்கே கொடூரம் இருக்கவில்லை. பிரியவேண்டிய சூழ்நிலை வந்தால் ஒதுங்கிப்போயிருப்போம் எத்தனைபேர். அதுதான் யதார்த்தம். அந்த காலகட்டத்தில் பெற்றோர் மீது பயமும் மதிப்பும் இருக்கும். இது எல்லோருக்கும் பொருந்தும். ஆனால் ஒரு சில அடிமுட்டாள்களின் முடிவுகள்தான் இதுபோன்ற வேதனைகளை ஏற்படுத்தி நிற்கின்றது.
கொலைக்கான உத்திகளை சினிமாக்கள் மூலமும் இணையத்தின் வாயிலாகவும் பெற்றுக்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்கள். உலகமயமாக்கலின் போக்கை இவ்வளவு தவறாக பயன்படுத்தியது யார் குற்றம்? இங்கு யாரும் யாரையும் திருத்தும் நிலையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாகரீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கையில் ஏதோ ஒரு வகையில் எல்லோரும் ஏதோ ஒன்றிற்குள் அடங்கிப்போகும் சாத்தியமே அதிகம். அது பணமாக இருக்கட்டும் சந்தோசத்தை ஏற்படுத்தும் வாழ்க்கை முறை ,புகழ், அந்தஸ்து என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அந்த மாயைகளில் இருந்து தப்பிக்கொள்ள எத்தனைபேரால் முடிகிறது. சுயகட்டுப்பாடும் சீரான சிந்தனையும் சமூகம் சார்ந்த நல்லெண்ணம் இருந்தால் மாத்திரமே வெற்றியை அடைய முயற்சிக்கலாம்;. இணையத்தையோ தொடர்பாடல் முறைமைகளையோ பயன்படுத்தும்போது ஒருவர் செய்யும் தீய செயல்களை இன்னொருவர் கட்டுப்படுத்துவதென்பது முடியாத காரியம். நாம் அந்த களத்தில்தான் இருக்கின்றோம். நாம் என்ன செய்கிறோம் என்பது நமக்கு தெரியும். இதனை புரிந்துகொள்வதில் எந்த சிக்கலுமில்லை.
உண்மையில் சினிமாவை பார்த்து அவர்கள் காதலை உன்னதமாக எண்ணியிருக்கலாம். தாங்களை பெரியவர்களாக அடையாளம் கண்டிருக்கலாம். இந்த தவறு அவர்களது புரிதலினாலேயே ஏற்பட்டது. கொலை செய்ய சிந்தித்தவர்கள் இதைபுரிந்துகொள்வது என்பது முடியாத காரியமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மூத்தோர்களாலும் ஆசான்களாலும் நல்ல பழக்கவழக்கங்கள் சிந்தனைகள் பற்றி வாய்மூலமோ எழுத்து மூலமோ வழங்கமுடியும். பகுத்தறிந்து உணர்ந்து நடப்பது ஒவ்வோர் தனிமனிதன் கையில் மாத்திரமே உண்டு. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார்கள் இக்கருத்து எல்லாவற்றுக்கும் பொருந்தும். நான் ஆரம்பத்தில் ஒர் கட்டுரையில் சொல்லியிருந்தேன் தனிமனித மாற்றமே சமூக மாற்றம்.
தகவல்களை திரட்ட உதவிய செய்தி இணையங்களுக்கு நன்றிகள்.
தனிமனித ஒழுக்கம் இந்தக்காலத்தில் வளர வேண்டியது காலக் கொடுமை...
ReplyDelete