கதைக்குள்ள போகும் முன்னாடி சில சொற்களுக்கான விளக்கம் தந்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இளனி -இளநீர்
ஆய்தல் – பறித்தல், கொய்தல்
ஒராள் - ஒருத்தர்
ஆரும் - யாரும்
எட்டாம் வகுப்பு படிக்கும் போது நடந்த ஒரு துன்பியல் சம்பவம்தான் இந்தக்கதை. அம்மன் கோவில் திருவிழா நாள். நாங்கள் ஆறுபேர் கொண்ட ஓர் அணி. மாலை ஏழு மணிக்கெல்லாம் கோவிலுக்கு வந்தாச்சு. கடைவீதி, சனக்கூட்டம் என சுற்றி திரிந்து கால் வலியும் வந்துட்டுது. நேரம் பதினொன்றை தாண்டுகையில் “டேய் இளனி ஆய்ஞ்சு குடிச்சா நல்லா இருக்கும்டா” தேவா ஐடியா தர களைச்சுப்போன உடம்பை தேத்த மனசு உற்சாகமானது. “சரி எங்கடா ஆய்ற?” நான். “வாங்க நான் கூட்டிற்று போறன்” என்ற தேவா எல்லோரையும் அழைத்துக்கொண்டு கோவிலில் இருந்து மூன்று தெருக்கள் தள்ளி இருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துவந்தான். வீடென்றால் ஆட்கள் குடியிருக்கும் வீடல்ல. பாதி கட்டி முடித்த வீடு. சுற்றிவர கம்பி வேலி. வேலியோரமாக இருந்த பதினைந்தடி உயரமான சிறிய தென்னைமரம்தான் தேவாவின் சாய்ஸ்.
‘என்னடா பக்கத்துல எல்லாம் வீடு. சத்தம் கேட்டா மாட்டிருவம். தோட்டம் என்றால் பரவால்லடா’ குசுகுசுத்தபடி ஜகா வாங்கப்பார்த்தான் ஒரு நண்பன். ‘சின்னமரம்தான். நல்ல குலையாகவும் இருக்கு. பயப்படாம இருங்க நைசா ஆய்வம்’ என்று தைரியத்தை கொடுத்த எனக்கு உள்ளுக்குள் கிடுகிடுப்பு. ‘அப்ப யார்ரா ஏறுற?’ ‘நான் முதல்ல மேலுக்கு ஏறுறன் பின்னாடி மூன்று பேர் ஏறுங்க. ஒராள் மரத்துக்கு கீழே நில்லு. இன்னொராள் றோட்டில நில்லு. நான் இளனி ஆய்ந்து தர ஒவ்வொராளா பாஸ் பண்ணி கீழே நிக்காள்கிட்ட கொடுக்க. கீழே நிக்கிறவர் றோட்டில நிக்கிறவர்கிட்ட கொடுத்தால் சத்தம் இல்லாமல் வேலையை முடிக்கலாம். என்னனுடைய பிளான் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட மிஷன் ஆரம்பமாகியது.
ஒரு இளனி, இரண்டு இளனி என போய்க்கொண்டிருக்கையில் திடீரென பாதி கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்க, அதைவிட பெரிய சத்தம் றோட்டில கேட்க அதுக்குப்பின்னாடி எனக்கு கீழே சத்தம். என்னன்ணு புரியல்லியா? வீட்டுக்குள் சத்தம் கேட்க றோட்டில நின்ன எளவெடுத்த பயல் பயந்து ஓட ஆரம்பிக்க அதைப்பார்த்த கீழே நின்றவன் கம்பி வேலிக்குள் புகுந்து ஓட என்னோடு மரத்தில் இருந்தவர்களும் சறுக்கியவாறு இறங்கி வேலிக்குள் புகுந்து ஓட ஆரம்பிக்க கேட்டதுதான் அந்த சத்தங்கள். எல்லோரும் எஸ்கேப் ஆகிறானுகள் நாம மட்டும் மரத்தில் இருக்கலாமா! அவனுகளை விட வேகமாக சறுக்கி வந்து வேலிக்குள்ளால் புகுந்து றோட்டுக்கு வந்தால் ஆய்ந்த இரண்டு இளனியும் இங்கே கிடக்கு. இதையும் எடுத்துக்கொண்டு அடுத்த தெருவுக்கு ஓடி வந்தால் ஐந்து பேரும் சிரித்துக்கொண்டு நிக்கிறாங்கள். ‘எல்லாம் உன்னாலதான்டா.சும்மா ஏன்ரா ஓடிவந்த’ என றோட்டில் நின்றவனை நான் கடிந்துகொள்ள. ‘ ஆரும் வந்திருவாங்க எண்டுதான்..’ ‘அப்ப நாங்க மட்டும் மாட்டுறதா?’ எல்லோரும் அமைதியாகியாச்சு. என்கு மனம் கேட்பதாயில்லை. இரண்டு இளனி போதாது. இன்னும் நான்காவது ஆயணும். இனி போறதக்கும் பயப்படுவானுகள். ஆனா போயே ஆகணும். மிஷன் ரீஸ்டார்ட். பிளானில் மாற்றம். பயந்தவர்களெல்லாம் றோட்டில். அதுக்குள் கொஞ்சம் தைரியமாய் இருந்தவனை அடையாளம் கண்டு அவனை என்னோடு அழைத்தேன்.
‘இப்ப நாங்க இரண்டு பேர் ஏறுறம் மற்றாக்கள் வெளில நில்லுங்க வசந்தன் நீ எனக்கு பின்னால ஏறு நான் ஆய்ந்து தர றோட்டில நிக்கிறாக்கள்ட்ட எறி. நீங்க கட்ச் புடிங்க. கீழே விட்டுறப்போடாது’ மரத்தில் ஏறி ஒரு இளனி ஆய்கையில் ‘வாங்கடா வாங்க’ கீழே சத்தம். ஒருத்தன் வீட்டுக்குள் இருந்து ஓடிவந்து இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு கத்திக்கொண்டிருந்தான். வீடு கட்டுவதற்கான பொருட்கள் அங்கே ஸ்டோர் பண்ணியிருந்ததால் காவலுக்கு அவன் படுத்திருக்கிறான் என்பது பின்னர்தான் தெரிந்தது. மறுபடியும் சத்தம் றோட்டில் நின்ற நாலுபேரையும் காணல்ல. ரெண்டு பேரும் சிக்கிட்டம். தப்புன தலையை திரும்ப கொண்டு குடுத்திட்டமே. யோசிக்க நேரமில்லை. வசந்தன் இறங்க எத்தனிக்கிறான். காவல்காரன் கத்துவது ப+தகரமாக இருக்கு. ‘வாங்கடா வாங்க’ கைநடுக்கத்தால் என்னையறியாமலேயே கையில் இருந்த இளனி நழுவி நீட்டியிருந்த காவல்காரன் கையில் விழ அவன் டென்சனாகி கையை உதற வசந்தன் கீழே இறங்கி விட்டான். காவல்காரன் விட்டமாதிரியில்லை. வசந்தனை துரத்த மரத்தை சுற்றி சுற்றி இருவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மரத்தில் இருந்து ஒரு ஐந்தடி சறுக்கி வந்தேன். பார்த்தேன் உள்ளே இறங்கினால்; ஆபத்து. அதே நேரம் அங்கிருந்து றோட்டிற்கு குதித்தால் தப்பிவிடலாம். சிந்தித்த கணமே றோட்டில் விழுந்தேன். தொடையை மரம் சிராய்த்துவிட்டது. சுதாகரித்துக்கொண்டு எழுந்து ஓடிவிட்டேன்.
பழைய அதே இடத்தில் நான்குபேரும். பயந்து போய் நின்றிருந்தார்கள். நான் போனதும் ‘எங்கடா வசந்தன்’
‘மாட்டிட்டான்’
‘அடிப்பானாடா?’
‘தெரியல்ல ஆனா நம்ம இப்பிடி நிக்கிற சரியில்ல அங்க போய் பார்ப்பம்’ திரும்ப மெதுவாக அவ்விடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கையில் எதிரே ஒரு உருவம் அமைதியாக வந்துகொண்டிருக்கின்றது. ஆம் அது வசந்தன்தான். எல்லோருக்கும் பெரிய நிம்மதி.
‘என்னடா நடந்துது’
‘புடிச்சிட்டான். ஒண்ணும் செய்யேலாம போய்ற்று . யார் யார் வந்த எண்டு கேட்டான். சொன்னன். பிறகு பக்கத்து வீட்டுக்காரக்களை எழுப்பி அவங்கள்ட்டயும் சொல்ல சொன்னான். அவங்கள்ட்டயும் சொன்னான். சரியான அவமானமாப்போச்சு. காலையில எல்லார் வீட்டயும் வாறன் எண்டான்’
சரி விடிஞ்சா மானம் போகப்போகுது. கோவில்ல பொங்கல் திருவிழா வேற. எல்லோருக்கும் இதுதான் கதையாக இருக்கப்போகுது. எல்லோரும் கோவில் பக்கம் வாறதில்லையெண்டு முடிவெடுத்தாச்சு. வேற வேற பிளான எப்பிடி வீட்டில இருந்து தப்பலாம் எண்டு. விடிஞ்சதும் நான் பத்துகிலோமீட்டர் தொலைவில் இருக்கிற அப்பம்மா ஊருக்கு ஓடி வந்துட்டேன். அன்று பின்னேரம் அம்மா வந்தாங்க. ‘ஊர்ல இளனி களவெடுத்து புடிபட்டுத்து இங்க வந்திருக்கான். கோவில்லஇதான் கதையா கிடக்கு’
பிறகென்ன டண்டனக்கா டணக்குணக்கா
ReplyDeleteபோங்க பாஸ் எங்களுக்கு லீவுல பொழப்பே இது தான் ..இன்றும்
கொஞ்சம் மனசு உருத்தா தான் செய்யும் .