Saturday, August 10, 2013


மனதில் எழும் சில கேள்விகள் பல முரண்பாட்டுடன் தீர்வின்றியே கிடக்கின்றன. அதில் இலங்கைப் பிரச்சினைகள் பற்றியே அதிகம் கேள்விகள் விடையின்றி தேங்கியுள்ளது.
 

எனக்கு நல்ல ஞாபகம் இந்தியாவும் இலங்கையும் மோதிய உலகக்கிண்ண இறுதிப்போட்டியின்போது இலங்கை தேசியக்கொடியையும் பட்டாசுகளையும் அள்ளிக்கொண்டு தெருத்தெருவாக ‘இலங்கை வெல்லும்’ ‘கிண்ணம் இலங்கைக்குத்தான்’ என்று கூச்சலிட்டு மகிழ்ச்சி ஆரவாரப்படுத்தி திரிந்த இளைஞர்கள் பட்டாளம். அது உண்மையிலேயே அவர்கள் உணர்வுரீதியாக ஏற்பட்டதொன்றே. இந்தியா ஜெயித்த பின்னர் வாலைச்சுருட்டிக்கொண்டு சோக கீதம் இசைத்து விளையாடிய வீரர்களுக்கு அர்ச்சனை செய்தது வேறு கதை.
 

இங்கே நிலைமை இப்படியிருக்க வெளிநாட்டில் இலங்கை அணிக்கெதிராக அங்கே வாழும் தமிழ் இளைஞர்கள் போர்க்கொடி தூக்கியமை எதற்காக? அவர்கள் அவர்களுக்காக போராடினார்களா? இல்லை இலங்கையில் இருப்போருக்காக போராடினார்களா? 
 

நிச்சயமாக அவர்கள் இங்கே திரும்பி வரப்போதில்லை. ஏனென்றால் இப்பொழுதும் அவுஸ்திரேலியா உட்பட ஏனைய மேற்கத்தைய நாடுகளுக்கு பத்து தொடக்கம் பதினைந்து இலட்ச ரூபாய் வரை செலவழித்து, தாங்கள் முன்னாள் போராட்டக்காரர்கள் எனவும் இங்கே வாழ முடியாது எனவும் போலியான ஆவணங்களுடன் உயிரை பணயம் வைத்து புறப்படும் என் சக இளைஞர்களை அவதானிக்கும்போது தெரிகிறது. தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். வேறு சிந்தனையோட்டம் அவர்களிக்கில்லை. சீமான், வைகோ நினைப்பது போன்று.
 

வடக்கில் வாழ முடியாது என்றும் எம் உறவுகளை காப்பாற்றுங்கள் என்றும் தமிழகம் உணர்ச்சிவசப்பட்டு கொந்தளித்துக்கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்திலே தங்களின் மாஸ் ஹீரோவின் திரைப்பட ரிலீசுக்கு பாலாபிஷேகம் செய்து மாணவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்ததை அங்கு எவரும் ஏன் இன்னும் அறியவில்லை?
 

மக்கள் போராடிக்கொண்டிருந்த காலத்தை விட இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களது கவலை அன்றாட வாழ்க்கையை எப்படி நகர்த்துவது. பிள்ளைகளின் எதிர்காலம் பொருளாதார மேம்பாடு இவைகள்தான் சிந்தனை. இலங்கைவாழ் சமான்ய தமிழ் மக்களை ஏன் புலம்பெயர் சமூகங்கள் புரிந்துகொள்ள தவறுகின்றன?
 

புலம்பெயர் உறவுகளின் ஒரு துளி வியர்வைக்கு கிடைத்த காசு இம்மண்ணிலே வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் ஒரு லீட்டர் இரத்தத்தை தனதாக்கி கொண்டதை ஏன் புரிந்துகொள்கிறார்களில்லை? மீண்டும் அதே யுகத்துக்கு இழுக்க முனைவது ஏன்?
 

இந்த மண்ணிலே பிறந்து இந்த மண்ணிலேயே வளர்ந்து இந்த மண்ணிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்தான் எதையும் தீர்மானிக்க வேண்டும். மண்ணின் உரிமத்தை பாதுகாத்துகொண்டிருக்கும் மக்கள்தான் எந்தவொரு முடிவெடுப்பதற்கும் முழுத் தகுதியானவர்கள் என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?
 

எந்தவொரு சாதாரண மனிதனையும் உணர்ச்சி வசப்படுத்தினால் அதற்குள் அடங்கிப்போகவே செய்வான். அதில் இன உணர்வு என்றால் சொல்லவே தேவையில்லை. இன மத உணர்வுகள் தூண்டப்படும் இடத்தில் மனிதம் மரணிக்க தொடங்கும். உணர்ச்சிவசப்படுத்தும் தலைமைகள் இதனை ஏன் விளங்கிக்கொள்கிறார்களில்லை?
 

கேள்விகள் அதிகம் உண்டு. இதற்கு வரும் வசைவுகளுக்கு பின்னர் மீதியை தொடரலாமுங்கோ. நானும் அதிகம் உணர்ச்சிவசப்படுற மாதிரி தெரியுது அதனால எஸ்கேப் ஆகிக்கிறன்.

4 comments:

 1. ஃஃஃஃஇந்த மண்ணிலே பிறந்து இந்த மண்ணிலேயே வளர்ந்து இந்த மண்ணிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்தான் எதையும் தீர்மானிக்க வேண்டும்ஃஃஃஃ

  என் சக ரத்தம் ஒன்று என்னோடிருப்பதை காணத் தவறி விட்டேனே
  நன்றி சகோ

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி தோழரே. நாம் முயன்றால் மாத்திரமே மாற்றத்தை கொண்டுவரலாம். மக்களுக்காக....

   Delete
 2. தமிழ்மணம் இணைக்க முடியாமல் ஏன்-ஏன்-ஏன்...? என்று குழப்பம் வந்து விட்டது... பல தடவை முயன்று script-ல் சின்ன மாற்றம் செய்தேன்...

  இன்று முதல் (இப்போது உங்கள் தளத்தில்) தமிழ்மணம் வேலை செய்கிறது... தமிழ்மணம் இணைத்து ஓட்டு அளித்து விட்டேன்... நீங்களும் ஒரு ஓட்டும் இடலாம்...

  மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...

  கற்றுக் கொள்ள வைத்தமைக்கும் நன்றிகள் பல...

  தொடர்ந்து எழுதவும்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியுடன் DD நன்றி சார். தமிழ் வலைப்பதிவுலக குடும்ப தலைவர் போன்றவராக உங்களை உணர்கிறேன். தமிழ் எழுத்துலகிற்கு என்று மே அழிவில்லை. உங்களைப்போன்றவர்கள் நிச்சயமாக பலரை உருவாக்குவார்கள்.

   Delete